×

உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் அளவிடும் பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி ஏற்கெனவே நடைபெற்றது. இதில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டன. இன்று காலை 50,001 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது;
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள தெப்பக்குளம், நந்தவனம் ஆகியவற்றை சீரமைத்து, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. கோயில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களில் சுமார் 4 கோடி பக்கங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. கோயில்களில் ஏற்கெனவே இருக்கிற சொத்துக்கள் இணையதளத்தில் ஏற்றும் பணிகள் நடக்கின்றன. கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ரோவர் கருவி மூலம் நில அளவீடு செய்து, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது திருப்புலிவனம் பகுதியில் ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 9.2 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கப்பட்டது. மயிலாப்பூர் கோயிலில் கடந்தாண்டு 8.9.2021ம் தேதி 4.52 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி முடிவுற்று, கோயில் நிலம் எத்தனை என குறிப்பிடும் வகையில் எச்ஆர்சிஇ எழுத்துகள் பொறிக்கப்பட்ட கற்களை பதித்துள்ளோம். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. 51 ஆயிரமாவது நிலம் அளவீடு செய்யும் பணி இன்று திருப்புலிவனத்தில் துவங்கியது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 2496 ஏக்கர் நில அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூராட்சி தலைவர் சசிகுமார், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி காளிதாஸ் இருந்தனர்.

Tags : Uttiramerur , Uttiramerur, Temple Land Survey, Ministers,
× RELATED உத்திரமேரூர் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு