×

கொரோனா கட்டுக்குள் வந்ததால் ஷாங்காய் நகரில் ஊரடங்கு வாபஸ் : 2 மாதங்களுக்கு பிறகு பொது மக்கள் வெளியே வந்தனர்!!!

பெய்ஜிங் : ஷாங்காய் நகரில் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் சில கட்டுப்பாடுகளுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய், இங்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியதால் ஏப்ரல் 5ம் தேதி முதல் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முக்கிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பொதுவெளியில் நடமாட அனுமதிக்கப்படுகின்றன. உணவு, மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அத்தியவசிய பொருட்களின் விநியோகமும் ஸ்தம்பித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் பல இடங்களில் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. குடியிருப்பு வளாகங்களை சுற்றி அமைந்து இருந்த வேலிகளை ஷாங்காய் நிர்வாக அதிகாரிகள் அகற்றினர். இதையடுத்து காலை முதல் ஷாங்காயில் இயல்பு நிலை தொடங்கி உள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தொடங்கி உள்ளனர். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் ஷாங்காயில் வசிக்கும் சுமார் 2 கோடி 50 லட்சம் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகள் பெற்று இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.


Tags : SHANGHAI CITY ,CORONA COT , Corona, Shanghai, Curfew, Return
× RELATED கொரோனா பரிசோதனை ஷாங்காய் நகருக்கு ராணுவம் வந்தது