மாதவரம் பால்பண்ணை அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: 2 பேரிடம் போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த மோகன் (34) ஆட்டோ டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மோகன் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் இவரது அண்ணன் செந்தில், மோகனை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் மோகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில், இது குறித்து பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

இதில் மோகனுக்கு தலை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மோகனின் நண்பர்களான ஜெபக்குமார் (37), பிரபு (34) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ஜெபக்குமார், பிரபு மற்றும் அவரது நண்பர்கள் மோகனை அடித்து கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இருப்பினும், முழுமையான விசாரணைக்கு பிறகு தான், கொலைக்கான காரணம் பற்றி தெரியவரும். மேலும் கைதான ஜெபக்குமார், மணலி அதிமுக நகராட்சி தலைவராக இருந்த முல்லை ஞானசேகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: