வாட்ஸ்அப்பில் நண்பருக்கு தெரிவித்துவிட்டு போரூர் ஏரியில் குதித்து பட்டதாரி தற்கொலை: பலமணி நேரம் போராடி உடல் மீட்பு

சென்னை: மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ராஜ்பரத் (24), பட்டதாரி. இவர், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருக்கு செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போகும் அந்த லொக்கேஷனை நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு, போரூர் ஏரியில் குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு, ஏரிக்கரை அருகே ராஜ்பரத்தின் பைக், செருப்பு, செல்போன் ஆகியவை இருப்பதை கண்டனர்.இதையடுத்து, ஏரியில் குதித்த ராஜ்பரத்தை இரவு முழுவதும் தீயணைப்பு துறையினர் தேடினர். ஆனால், கிடைக்காததால் நேற்று காலை மீண்டும் ராஜ்பரத் உடலை தேடும் பணியில் கிண்டி  தீயணைப்பு வீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ரப்பர் படகுகளுடன் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் ராஜ்பரத் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை செய்ததில், ராஜ்பரத்தின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories: