×

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இளநிலை பொறியாளர், வரைதொழில் அலுவலர் வேலை: சமூக நீதி கண்காணிப்பு குழு, நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு கடிதம்

சென்னை: தமிழக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வி, வேலை வாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு அரசால் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 436க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து ஆண்டுதோறும் சுமார் 12,000 மாணவர்கள் வெளி வரும் நிலையில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு 5.3.2021 அன்று முதன் முறையாக வெளியிடப்பட்டதில் கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான கல்வி என கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சியில் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி டிப்ளமோ படிக்காமல் நேரடியாக பிஇ படித்தவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீர்ப்பின்படியும், அரசாணைப்படியும் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்திட கோரி மனு வரப் பெற்றுள்ளது.

எனவே, டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளில் நீதிமன்ற தீர்ப்பின்படியும் டிப்ளமோ முடித்தவர் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினை சார்ந்தவர்கள் என்பதனைக் கருத்தில் கொண்டும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படியும். வேலை வாய்ப்பினை உறுதி செய்திடுமாறு நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்திற்கு இக்குழு பரிந்துரை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Highways Department ,Social Justice Monitoring Committee , Diploma in Civil Engineering Graduate Engineer, Drawing Officer Jobs: Letter to Social Justice Monitoring Committee, Highways Secretary
× RELATED ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்