ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி தாம்பரத்தில் நிறைவு இனி மக்களுக்கான பணி தொடங்கும்: பிரிவு உபசார விழாவில் தாம்பரம் கமிஷனர் ரவி பேச்சு

சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் முதல் போலீஸ் கமிஷனர் ரவி நேற்று ஓய்வு பெற்றார். இதனால் தமிழக காவல்துறை சார்பில் பிரிவு உபசார விழா நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு டிஜிபி ரவி தனது மனைவி தெய்வம் ரவியுடன் கலந்து கொண்டார். அவருக்கு காவல் துறையின் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து டிஜிபி ரவியை வரவேற்றார். பிறகு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற டிஜிபி ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, தீயணைப்புத்துறை டிஜிபி பிராஜ் கிஷோர், சைபர் க்ரைம் டிஜிபி அம்ரேஷ் புஜாரி, சீவில் சப்ளை சிஐடி டிஜிபி அபாஷ் குமார், சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், டிஜிபி ரவியின் தாய், 2 மகள்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், ஓய்வு பெற்ற டிஜிபி ரவி பேசியதாவது: இன்று பணி ஓய்வு பெறுகிறோம் என்று நான் இப்போழுது கூட எண்ணியது இல்லை. நான் பணி ஓய்வு பெறவில்லை. இரவு 12 மணி வரை எனது பணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். காலை 11 மணி முதல் 12 மணி வரை மிகப்பெரிய நில அபகரிப்பு நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று துணை கமிஷனர் சுப்புலட்சுமி கூறினார். நான் கிட்டத்தட்ட 200 கையெழுத்துகளை போட்டுவிட்டு தான் வந்துள்ளேன். தாம்பரம் காவல் ஆணையராக 150 நாட்களில் 97 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளேன். 32 ஆண்டுகள் இந்த காவல் துறையில் பணியாற்றி உள்ளேன்.

உதவி கமிஷனராக ஸ்ரீவைகுண்டத்தில் முதன்முதலாக பணியை தொடங்கி கடைசியாக தாம்பரத்தில் பணியை முடிக்கிறேன். இது காவல்துறை பணியைத்தான் நான் முடிக்கிறேன். தவிர மக்கள் மீதான பணியை இனிமேல்தான் நான் தொடங்குவேன் இந்த அணிவகுப்பு மரியாதையை அளித்த தமிழக அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபிக்கும் எனது நண்பர்களுக்கும், காவல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று ஓய்வு பெறுகிறேன் என்று எனக்கு கொஞ்சம் வருத்தம். இந்த சீருடையை நான் அணிய முடியாது என்ற ஒரே வருத்தம் தான்.  இந்த பணி ஓய்வு என்பது காவல் பணிக்கான ஓய்வே ஒழிய மக்கள் பணிக்கான ஓய்வு இல்லை. இவ்வாறு பேசினார்.

Related Stories: