×

மாநிலங்களவை தேர்தலில் சீட் தரப்படாததால் 2 ஒன்றிய அமைச்சர்கள் பதவி காலி: பாஜ, ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தி அலை

புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் பாஜ கட்சி சார்பில் 22 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், தற்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்தும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சராக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு பாஜ இம்முறை சீட் தரவில்லை. உபி.யில் அதிகபட்சமாக 8 பேரை பாஜ களமிறக்கிய போதிலும், நக்வி கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதே போல், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சராக ஆர்.சி.பி.சிங் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அவரது எம்பி பதவிக் காலம் ஜூலையுடன் முடிவடைய உள்ளது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், மீண்டும் ஆர்.சி.பி.சிங்குக்கு சீட் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், ஆர்.சி.பி.சிங்குக்கு இம்முறை சீட் தரப்படவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏவும், மாநில கட்சி தலைவருமான கீரு மஹதோவை களமிறக்கி உள்ளார் நிதிஷ்.

இதன் காரணமாக, முக்தர் அப்பாஸ் நக்வி, ஒன்றிய எக்கு துறை அமைச்சரான ஆர்.சி.பி.சிங் இருவரின் அமைச்சர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே பாஜ, ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தி அலையை உருவாக்கி உள்ளது. ‘விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன், நான் பதவியில் தொடர்வேனா என்பதை அவர் முடிவு செய்வார்’ என ஆர்.சி.பி.சிங் சவால் விடுத்துள்ளார். விரைவில் இவர் பாஜ.வுக்கு தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Tags : Union Ministers ,of ,Baja, United Janata , 2 Union Ministers vacated due to non-allocation of seats in state assembly elections: BJP, wave of discontent at United Janata Party
× RELATED மன்மோகன்சிங், 9 ஒன்றிய அமைச்சர்கள்...