×

கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு ரூ.100 கோடியில் 80 கோயில்கள் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை:  ரூ.100 கோடியில் 80 கோயில்கள் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் கல்யாண வரதராஜர் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பல லட்சம் ரூபாய் செலவில் 65 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் மற்றும் சிதிலமடைந்த சிலைகள் சீரமைத்தல், சுற்றுச்சுவர் வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர், திருப்பணிகள் நிலவரம் குறித்து துறை அதிகாரியிடம் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது: 450 ஆண்டு பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் 2003ம் ஆண்டு திருப்பணி முடிவுற்று குடமுழுக்கு நடந்துள்ளது. அதன்பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை, தற்போது ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. 1000 ஆண்டுகள் கடந்த 80 கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இக்கோயிலில் திருப்பதிக்கு இணையாக கியூ காம்ப்ளக்ஸ் 500 பேர் அமரும் வகையில் அமைக்கப்படவுள்ளது என்றார். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (பொறுப்பு) இரா.கண்ணன், எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kalyana ,Perumal ,Minister ,BK Sekarbabu , Kalyana Varatharaja Perumal temple inspection 80 temples will be renovated at a cost of Rs 100 crore: Minister BK Sekarbabu
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்