×

பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி செல்லாது: யுஜிசி அறிவிப்பு

சென்னை:  பெரியார் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் தொலைதூரக் கல்வி துறையில்  விதிகள் மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி செல்லாது என்றும், அதில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2007-08ம் ஆண்டில் தொலைதூரக் கல்வி பாடத்திட்டம் நடத்த பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்தது. அதன்படி தொலைதூர கல்வியை 2014-15 கல்வி ஆண்டு வரை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு 2019-20 வரை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட தொலைதூர கல்விக்கு முழு நேர இயக்குனர், முழு நேர பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தொலைதூர கல்வி மையங்கள் ஆகியவை இல்லை என்றும், திறந்தநிலை மற்றும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கான யுஜிசியின் அனுமதி வாங்கவில்லை என்றும் பல்வேறு புகார்கள் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வந்தது. இந்த புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி யுஜிசியின் விசாரணை குழுவினர் விசாரணை மற்றும் ஆய்வுகள் நடத்தினர்.

அதன்படி, 2022-23 முதல் 2023-24க்கு மேற்கண்ட தொலைதூர கல்வி நடத்துவதற்கான விண்ணப்பம் வரவில்லை, கடந்த 2021-22ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்காக உயர்கல்வித்துறை  மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் மீண்டும் அனுப்பவில்லை. மேலும் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட விதி மீறல்கள் குறித்த விவரங்கள் ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எந்த பாடத்திட்டத்துக்கும் யுஜிசி அனுமதி வழங்கவில்லை. அது செல்லாது  என்பதால் அதில் சேர வேண்டாம்.

Tags : Periyar University ,UGC , Periyar University Distance Education Invalid: UGC Announcement
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...