சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் போட்டிகள் நடந்த மும்பை, நவி மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத் அரங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.1.25 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

* சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 9வது இடத்தில் இருந்த இந்திய அணி ஜனவரி கடைசியில் 10வது இடத்துக்கு சறுக்கியது. அதன் பிறகு விளையாடிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதால் தற்போது 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் ‘டாப் 5’ அணிகளாக உள்ளன.

* பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் (ஜூலை) பங்கேற்க உள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப், விளையாட்டு கிராமத்தில் தனது குழந்தையுடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்யூ மிடில்கூப் (நெதர்லாந்து) இணை முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

* பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சக அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சுடன் நேற்று மோதிய கோகோ காஃப் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

* வங்கதேச டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மோமினுல் ஹக் (30 வயது) அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடந்த தொடரை 0-1 என இழந்த நிலையில் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

* இங்கிலாந்தில் மதுபான விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயம் அடைந்த தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் மோண்ட்லி குமாலோ (20 வயது) மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ரத்தக்கசிவு உள்ளதால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: