×

2 இளம்பெண்கள் சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் அனுமதி: சவுதி அரேபியாவில் படிக்கும்போது மலர்ந்த காதல்

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம்  அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின் (22). சில வருடங்களுக்கு முன் இவர் படிப்பதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு, கோழிக்கோடு மாவட்டம், தாமரைசேரி என்ற இடத்தை சேர்ந்த பாத்திமா நூரா (23) என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் மிகவும் நெருக்கமாகினர். காதல் மலர்ந்தது. கேரளா திரும்பிய பிறகும் இவர்களிடையே தொடர்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

 சில மாதங்களுக்கு முன் ஆதிலா நஸ்ரின், பாத்திமாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக கோழிக்கோடு சென்றார். இருவரும் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் தங்கினர். இது குறித்து அறிந்த இருவரின் குடும்பத்தினரும் கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தனர். பின்னர், போலீசாரின்  தலையீட்டால் இருவரையும் அவர்களின் பெற்றோர் பிரித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். நுாராவை பிரிந்து வாழ முடியாமல் தவித்த ஆதிலா,  கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘நானும் பாத்திமா நூராவும் சேர்ந்து வாழ தீர்மானித்து உள்ளோம். ஆனால், தற்போது அவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் சந்திரன், பாத்திமா நூராவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோழிக்கோடு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நூராவை போலீசார் நேற்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது, தாங்கள் இருவரும் இணைந்து வாழ விரும்புவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, இருவரையும் சேர்ந்து வாழ அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Kerala High Court ,Saudi Arabia , Kerala High Court allows 2 girls to live together: Love blossomed while studying in Saudi Arabia
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...