×

மாரியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விழா

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், அம்மனுக்கு காப்பு அணிவித்து ஊரணி பொங்கல், கூழ் வார்த்தல் விழா நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோயில் விழா நடக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டு மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்து ஊரணி பொங்கல், கூழ் வார்த்தல் விழா நடத்த திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமி அலங்காரம் செய்து ஊர்வலம் நடந்தது. இதையாட்டி நேற்று ஊரணி பொங்கல், கூழ்வார்த்தல் விழா நடந்தது.

இதில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகள், கொடி தோரணம், வாழைமரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்தனர். காலை முதலே கோயில் வளாகத்தில் அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர், காலை 8 மணியளவில் ஏராளமான பக்தர்கள், தங்களது வீட்டில் இருந்து குடங்களில் கூழை, தலையில் சுமந்தபடி கோயிலுக்கு கொண்டு வந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரத்தியோக தொட்டியில் ஊற்றினர். பின்னர், பொதுமக்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இரவு ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Urani Pongal Festival ,Mariamman Temple , Urani Pongal Festival at Mariamman Temple
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா