மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி தொடக்கம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் வண்டலூர், கூடுவாஞ்சேரி, மாம்பாக்கம் ஆகிய குறு வட்டங்கள் உள்ளன. அதில், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், கீரப்பாக்கம், முருகமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு, வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. தாசில்தார் ஆறுமுகம் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் ராஜா வரவேற்றார். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.

அதில், ஏழை எளிய குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா, வீடு, இடம் இல்லாதவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா அல்லது குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, பல ஆண்டுகளாக வனத்துறையால் கிடப்பில் உள்ள சாலையை சீரமைப்பது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இருந்தன. இதில் பட்டா, பெயர் மாற்றம், திருத்தம், ரேஷன் கார்டு ஆகிய மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. பெறப்பட்ட 127 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமி சண்முகம், துணை தலைவர் சுமதி லோகநாதன், ஊரப்பாக்கம் பவானி கார்த்தி, நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திருப்போரூர், தண்டலம், காலவாக்கம், கண்ணகப்பட்டு, இள்ளலூர், செங்காடு, எடையன்குப்பம், செம்பாக்கம், அச்சரவாக்கம், மடையத்தூர், செட்டிப்பட்டு ராமையன்குப்பம், சிறுதாவூர், ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், வெங்களேரி, தையூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.

திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் தலைமை தாங்கினார். திருப்போரூர் குறு வட்ட வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள் வரவேற்றார். எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், வேளாண் ஆத்மா குழுத் தலைவர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு ஆர்டிஓ சஜீவனா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். அதில், ஆலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், வெங்களேரி இணைப்பு சாலைகளை சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகம் அடைத்துள்ளதை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.

அதேபோன்று, ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து தி.நகர் வரை மீண்டும் மாநகர பஸ் இயக்க வேண்டும். முள்ளிப்பாக்கம் - கோயம்பேடு இடையே 40 ஆண்டுகளாக இயக்கப்பட்ட கல்பாக்கம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் (தஎ 119பி) கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் இருந்தன. இதற்கிடையில், திருப்போரூர் பேரூராட்சியில் வசிக்கும் காட்டு நாயக்கன் சமூகத்தினருக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும்.மென 8வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் குமரன் பழங்குடியினருடன் ஊர்வலமாக வந்து மனு அளித்தார்.

Related Stories: