6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டில் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ தூரத்திற்கு ரூ.3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளன. இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதி நஞ்சை நில விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை நஞ்சை நில விவசாய நல சங்க நிர்வாகிகள் குணசேகரன், சசிகுமார், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில விவசாய சங்க தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் துளசி நாராயணன் கண்டண ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ரமேஷிடம் மனு கொடுத்தனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயி ஜெயச்சந்திரன் தலைமையில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது, மூன்றுபோகம் விவசாயம் செய்யக்கூடிய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைக்கும்  திட்டத்தை கைவிட்டு, மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும். தச்சூர் முதல் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளிப்பட்டு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: