×

கோவில்பட்டியில் கடலைமிட்டாய், திருச்செந்தூரில் பனைபொருட்கள் எளிதில் கிடைக்கும்: மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் பிரபல பொருட்களை விற்க முடிவு

நெல்லை: மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் பிரபல பொருட்களை விற்பனை செய்திட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கோவில்பட்டியில் கடலைமிட்டாய், தூத்துக்குடியில் மக்ரூன் உள்ளிட்ட பொருட்கள் இனிமேல் ரயில் நிலையங்களில் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது. மதுரை கோட்டத்தில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் சுங்குடி சேலை மற்றும் பனை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நெல்லை ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்கப்பட்டபோது, ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் மட்டுமின்றி, மாநகர மக்களும் ரயில் நிலைய பனை பொருள் அங்காடியை தேடிச்சென்று பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். மதுரை ரயில் நிலையத்தில் தற்போது மீண்டும் சுங்குடி சேலை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருட்களை விற்பதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காராச்சேவு, தென்காசி மற்றும் செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூரில் பனை பொருட்கள், காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ், பழனியில் பஞ்சாமிர்தம், பரமக்குடியில் மிளகாய் வத்தல், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், சங்கரன்கோவிலில் மாம்பழம் போன்ற விவசாய பொருட்கள், சிவகாசியில் டைரிகள் நோட்டு புத்தகங்கள்,

மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டையில் பலாப்பழம், சிவகங்கையில் செட்டிநாடு கொட்டான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, கொடைக்கானல் ரோட்டில் பன்னீர் திராட்சை, திருமங்கலத்தில் கைலிகள், ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை, அம்பாசமுத்திரத்தில் பத்தமடை கோரை பாய், மணப்பாறையில் முறுக்கு, புனலூரில் மிளகு, கொட்டாரகராவில் முந்திரி ஆகியவை விற்பனை செய்வதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது. விருப்ப மனுவை www.sr.indianrailways.gov.in <  http://www.sr.indianrailways.gov.in/ > என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு க்களை ஜூன் 5ம் தேதி மாலை 3 மணி வரை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது srdcm@mdu.railnet.gov.in <  mailto:srdcm@mdu.railnet.gov.in > என்ற இணையதள முகவரிக்கும் அனுப்பலாம். குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதியில் இந்த உள்ளூர் பொருட்களை விற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதன்மூலம் பயணிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் அப்பகுதியில் பிரபலமான பொருட்களை எளிதில் வாங்கி செல்ல முடியும்.

நெல்லைக்கு ‘அல்வா’
மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் பிரபல பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பிரபலமான நெல்லை அல்வா விற்பனை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. நெல்லை ரயில்நிலையத்தை சுற்றிலும் போலி அல்வா விற்பனை ஏற்கனவே களைகட்டியுள்ளது. எனவே தரமான அல்வா விற்பனைக்கு நெல்லை ரயில் நிலையத்தில் அங்காடி திறந்திட ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்குவதோடு, அதற்கான விருப்ப மனுக்களையும் பெற முன்வரவேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Govilbatti ,Thiruchendur ,Madurai Fort , Peanut Butter at Kovilpatti, Palm Products Easily Available at Thiruchendur: Decision to sell popular items at 30 railway stations in Madurai division
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...