குமரியில் பருவமழை தொடங்கும் முன்பு நீர்நிலைகள் பராமரிக்கப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

அஞ்சுகிராமம்: கிராமப்புறங்களில் கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீராதாரங்கள் முன்பெல்லாம் முறையாக பராமரிக்கப்பட்டன. மழைக்காலங்களில் ஓடைகள் வழியாக வரும் நீர், குளம், குட்டைகளில் சேகரிக்கப்பட்டு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருந்ததோடு, நமக்கு போதுமான நீராதாரம் கிடைத்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் நன்கு பயன்பெற்று வந்தனர். மேலும் கோடைக்காலங்களில் குடிநீர் பிரச்னை தலை தூக்காமல் மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், காலப்போக்கில் குளம், குட்டைகள் மற்றும் கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டு காணாமல் போய் வருகின்றன. பல இடங்களில் குளங்கள், குட்டைகள் போல் சுருங்கியும், கால்வாய்கள் ஒடுங்கியும் காணப்படுகின்றன. பல நீராதாரங்கள்  தற்போது சாக்கடை கழிவுகள், குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறியுள்ளன. இதனால் குளம், குட்டைகள், கால்வாய்கள் மாசுபட்டு, நீரை சேமிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் தலைகாட்டி வருகின்றன. பருவ மழையின்போது ஆற்றோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு சார்பில் தற்போது குளம், குட்டைகள், கால்வாய்கள் துார்வாரப்பட்டு வருகிறது. அதுபோல பருவமழை தொடங்குவதற்கு முன்பு, ஆக்ரமிப்பில் உள்ள நீர்நிலைகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பராமரிப்பின்றி காணப்படும் ஆற்றின் கரை ஓரங்கள் உட்பட நீர்நிலைகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்த நிலையிலும், சாலைகளை ஆக்ரமித்தும், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையிலும் காணப்படுகின்றன. எனவே ஆபத்தான மின்கம்பங்கள் உட்பட அனைத்து மின் பழுதுகளையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: