×

தென்ஆப்பிரிக்க தொடரில் சொதப்பினால் 3 வீரர்களை கழட்டிவிட பிசிசிஐ திட்டம்

மும்பை: இந்தியா வரும் தென்ஆப்பிரிக்க அணி ஜூன் 9ம்தேதி முதல் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 3 வீரர்கள் அணியில் தங்களை தக்க வைத்துக்கொள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இல்லாதபட்சத்தில் அவர்களை கழட்டிவிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருவதால், அவர்களுக்கு தென்ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினேஷ் கார்த்திக், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் 3 வீரர்கள் மீது பிசிசிஐ குறி வைத்திருப்பதாகவும், அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் நிரந்தர இடம் கிடைக்காததால் தனது திறமையை நிரூபிக்க முடியாமல் தவித்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிற்கு, 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தொடர்ந்து இடம் கொடுத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட குல்தீப் சிறப்பாக பந்துவீசி மேட்ச் வின்னராக இருந்து வந்தார்.

இதனால், தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியில் இளம் ஸ்பின்னர்கள் அதிகம் இருப்பதால், குல்தீப் இத்தொடரில் சொதப்பினால் அடுத்த வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என கருதப்படுகிறது. இதுபோல் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரராக அபாரமாக ஆடியவர் ருதுராஜ் கெய்க்வாட். இளம் வீரரான இவர் 2022 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடினார். இருப்பினும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நம் அணியில் துவக்க ஆட்டக்காரர்களுக்கு அதிக போட்டி இருப்பதால், ருதுராஜ் தென்னாப்பிரிக்க தொடரில் தனது திறமையை நிரூபிக்காதபட்சத்தில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதானது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதேபோல் 2021 ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர்  வெங்கடேஷ் ஐயருக்கு விரைவிலேயே இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதாவது ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு, பந்துவீச முடியாமல் இருந்ததால் அந்த வாய்ப்பு வெங்கடேஷ் ஐயருக்கு கிடைத்தது.

ஆனால் தற்போது நடந்த ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதிலும் இவர் மோசமாக ஆடினால் அடுத்த வாய்ப்பை பெறுவது கடினம். எனவே மேற்கண்ட 3 வீரர்களும் சிறப்பாக ஆடுவதன் மூலமே தங்களை அணியில் வைத்துக்கொள்ள முடியும்.

Tags : BCCI , The BCCI plans to sack 3 players due to injury in the South African series
× RELATED அணியின் நலனுக்காக புதிய...