×

ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு சத்திரத்தில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்பட்ட 14ம் நூற்றாண்டை சேர்ந்த சத்திரம், கல்வெட்டுகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மூலனூர் ஆலம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது தோட்டத்தில் பழமையான சத்திரம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு ஆய்வு மைய வரலாற்று ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில், லட்சுமண மூர்த்தி அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:14ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சத்திரம் 12 கல் தூண்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இச்சத்திரத்தில் 14ம் நூற்றாண்டை சேர்ந்த 5 துண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் தொடர்பற்று காணப்படுகிறது.

இதற்கு காரணம் இச்சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டபோது கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம். இதன் மறு கட்டமைப்பு காலம் 16ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த கல்வெட்டில் குறுநில மன்னன் கலிய அதியமான் என்பவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.இந்த சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டில் கலிய அதியமான், ராஜராஜேஸ்வரி, கலி உலகா போன்ற பெயர்களும், கழஞ்சு, பொன், நஞ்சை, நிறைஇலி போன்ற சொற்களும் காணப்படுகின்றன. இந்த சத்திரம் வழிப்போக்கர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு கூறினர்.

Tags : Otansa , At a 14th century inn near Ottanchattaram Discovery of Inscriptions
× RELATED ஒட்டன்சத்திரத்தில் சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்