திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பல கோடி செலவில் நடந்து வரும் திருப்பணியை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டை சன்னதி தெரு பகுதியில் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. 65 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் மற்றும் சிதிலமடைந்த சிலைகள் சீரமைத்தல், சுற்றுச்சுவர் வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது திருப்பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, திருப்பணி நிலவரம் குறித்து  கோயில் அதிகாரியிடம் கேட்டறிந்தார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் வகையில் விரைவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர்கள் கவி கணேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், சைலஸ், சதீஷ், எம்.வி.குமார், கார்த்திகேயன், கேபிள் டிவி ராஜா, குமரேசன் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

சலவை தொழிலாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்

தமிழ்நாடு சலவை தொமுச பேரவையின் சென்னை மாவட்ட 2வது மாநாடு சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது. பேரவை மாநில தலைவர் எம்.எம்.சாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் தொமுச மாநில பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சலவை தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்குதல், நவீன வசதியுடன் சலவை செய்வதற்கு அரசு ஆவண செய்தல், மழை காலங்களில் சலவை தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்குதல், நல வாரியம் மூலம் அரசு ஆண்டு தோறும் வழங்கும் 5 ஆயிரம் இஸ்திரி பெட்டிகளை உயர்த்தி வழங்குதல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சலவை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகர், பட்டாளம், சேத்துப்பட்டு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சலவை துறை திமுக ஆட்சியில் கலைஞரால் மேம்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் சலவை துறையை ஆய்வுசெய்து அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களது எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார்’ என்றார். மாநாட்டில், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், ராயபுரம் பகுதி செயலாளர் செந்தில் மற்றும் அருளரசன், சோமசுந்தரமூர்த்தி, கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: