×

பிஏபி பிரதான கால்வாய் ஆங்காங்கே உடைப்பு தண்ணீர் விரயமாவதை தடுக்க விரைந்து சீர்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி:  பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், திருமூர்த்தி அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிக்குட்பட்ட சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது. அந்த அணைகளின் நீர் ஆதாரத்தை பொறுத்து, அவ்வப்போது விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதில், உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்  பயன்பெறுகின்றன. ஆனால், கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிஏபி திட்ட வாய்க்கால்கள் பல இடங்களில், இன்னும் புதர் மண்டி, பழுதான நிலையில் உள்ளது.சில வாய்க்கால்களில் மண், கற்கள் குவிந்து மாயமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக, கிளை வாய்க்கால்களில் அவ்வப்போது தண்ணீர் திறப்பு இருக்கும் வேளையில், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும். கடை மடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது.

இதில், திருமூர்த்தி அணையிலிருந்து  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் கெடிமேடு, பூசாரிபட்டி வழியாக மிக அகலமான பிரதான கால்வாயில் பாய்ந்து செல்கிறது.இந்த கால்வாயிலிருந்து கிளை கால்வாய், அதன்பின் வாய்க்கால் என பிரிந்து செல்கிறது. ஆனால், கெடிமேடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்கள் வழியாக செல்லும் பிஏபி பிரதான கால்வாயின் பக்கவாட்டு பகுதி ஆங்காங்கே இடிந்து உருக்குலைந்திருப்பதுபோல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், பிஏபி பிரதான கால்வாய்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப பணிகள் நடைபெறவில்லையா? என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. பிஏபி  திட்டத்தின் முக்கியமானதான, சுமார் 49 கிலோ மீட்டர் தூரமுள்ள கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

அதுபோல், விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் விரயமாவதை தடுக்கும் வகையில்,  சுமார் 50 வருடங்கள் கடந்த, திருமூர்த்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிஏபி பிரதான கால்வாயை முழுமையாக பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.தற்போது, கெடிமேடு வழியாக செல்லும் பிஏபி பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லாததால், போர்க்கால அடிப்படையில் பிரதான கால்வாயை சீரமைத்தால் மட்டுமே, அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் விரயமாகாமல், கடை மடை விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்க முடியும். அதற்கான துரித நடவடிக்கையில் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : BAP , BAP main canal intermittent rupture Request for speedy repair to prevent water wastage
× RELATED பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத...