மாதனூர் பாலாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதால் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

ஆம்பூர்: மாதனூர் பாலாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து நேற்று போக்குவரத்து மீண்டும் துவங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் செல்லும் சாலையில் பலாற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரை பாலம் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. உடன் அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த தற்காலிக தரைப்பாலம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அடித்து செல்லபட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராமத்தினர் தவித்து வந்தனர்.

இந்நிலையில், பாலாற்றில் வெள்ள நீர் திருப்பி விடப்பட்டு இந்த தரைப்பாலம் மீண்டும் தற்காலிகமாக சரி செய்யும் பணி துவங்கியது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அப்பகுதியினர் அங்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், அரசுபஸ் , லாரிகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மீண்டும் அவ்வழியாக செல்ல துவங்கின. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வரும் பல்வேறு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களுக்கு நிரந்த தீர்வாக மேம்பாலம் உடன் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: