கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த 21-வது நாய்கள் கண்காட்சி: சிட்சு, ஜெர்மன் ஷெப்பர்ட், போமெரியன் நாய்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி நடைபெற்றது. கொடைக்கானலில் கோடை விழாவின் முக்கிய பங்காக கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பாக 21-வது ஆண்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாய்கள் பங்கேற்றன. குறிப்பாக சிட்சு, ஜெர்மன் ஷெப்பர்ட், போமெரியன், ராஜபாளையம், சிப்பிபாறை, பிக்புல் உள்ளிட்ட ரக நாய்கள் உள்பட மொத்தம் 54 நாய்கள் கண்காட்சியில் கலந்துகொண்டன. அப்போது நாய்கள் அன்னநடை போட்டும், பாய்ந்து ஓடியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

4 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் நாய்களுக்கு பராமரிப்புகள் மற்றும் நடத்தைகள் பார்த்து பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அப்துல் ஹக்கீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். இதில் கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை டாக்டர்கள் அருண், தினேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். கொடைக்கானலில் நேற்று காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Related Stories: