சாலை, கட்டிடம், பஸ் நிலையங்கள் பெயரிடல் மற்றும் மாற்றம் செய்ய அரசு அனுமதி பெற்றே மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்: நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு

சென்னை: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள் பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள் அரசிற்கு அனுப்பப்பட்டு, அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நகராட்சி துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்னைகள் எழுந்துள்ளன. இக்கட்டிடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் பெயரிலேயே  அழைக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.  

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981-ன் பிரிவு 266 முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துகளுக்கு பெயரிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துகளுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

எனவே முதல்வர் அறிவுறுத்தலின்படி மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டிடங்கள், பூங்கா, விளையாட்டு இடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகளின் ஆணையர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும். அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: