வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுதண்ணீர் மற்றும் சாம்பல் கழிவுகளால் கடல்வாழ் இனங்கள் அழியும் அபாயம்: மீனவர்கள் போராட்டம்

சென்னை: எண்ணூர் முகத்துவார ஆற்றில் எண்ணூரை சேர்ந்த தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன், நண்டு, இறால் பிடித்து வாழ்கின்றனர்.  சுற்றுவட்டாரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து ரசாயன கழிவுகள் இந்த முகத்துவார ஆற்றில் விடுவதால் ஆற்று நீர் மாசு ஏற்பட்டு மீனவர்களுக்கு பல்வேறு தோல் நோய் ஏற்படுகிறது. மேலும் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுதண்ணீர் மற்றும் சாம்பல் கழிவுகள் முகத்துவார ஆற்றில் விடப்படுகின்றன. சுடுநீரில் சோடியம் கலந்திருப்பதால் நண்டு, இறால், மீன்கள் அழிந்து விடுவதாக கூறி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் ரசாயன கழிவுகளைஆற்றில் விடக்கூடாது என மீனவர்கள் போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். மீன்பிடித் தொழில் செய்ய முடியாத பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை முகத்துவார ஆற்றங்கரையில் ஒன்று கூடினர்.

பின்னர் பைபர் படகுகளில் முகத்துவாரம் பகுதியில் ஆற்றுக்குள் சென்று வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுநீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்தனர். தகவலறிந்த எண்ணூர் போலீசார் மற்றும் வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் `எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் அடைப்பை எடுப்போம்’ என்று மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீனவ கிராம நிர்வாகிகளிடம் வடசென்னை அனல்மின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: