பெரும்பாக்கத்தில் பயங்கரம் பெயின்டர் வெட்டிக்கொலை: நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

வேளச்சேரி: தேனாம்பேட்டை, எஸ்.எஸ்.புரம், ராதா நகர், கிரீம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(35) பெயின்டர். இவரது மனைவி சுகந்தி. சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரது குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த மனைவி அவரை கண்டித்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, மனைவியை பிரிந்த அவர் பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நேதாஜி சாலையில் உள்ள மருந்து கடை அருகே தனியாக நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை சுற்றிவளைத்து திடீரென பட்டாக்கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில், படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து அங்கேயே பரிதாபமாக பலியானார். பின்னர், அவர்கள் பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த, பெரும்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். சுந்தரமூர்த்தியை படுகொலை செய்த பொறை சந்தோஷ்(26), விஜய்பாபு(28) ஆகியோர் நேற்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை  காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: