×

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சையில் தூர் வாரும் பணிகளை இன்று மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில், ஆறு, ஏரி, கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி புறப்பட்டு சென்றார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று காலை முதல்வர் ஆய்வு செய்கிறார். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெறுவதற்காக ரூ.80 கோடியில் ஆறு, வாய்க்கால், வரத்து வாரிகள் என 4,964 கி.மீட்டர் தூர்வாரும் பணி கடந்த ஏப்ரல் 13ல் துவங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்று (31ம் தேதி) முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் கடந்த 24ம் தேதி தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து விட்டார். அந்த தண்ணீர், கல்லணைக்கு கடந்த 27ம் தேதி வந்தது. அங்கிருந்து அன்றைய தினமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், 5 நாட்களில் கடைமடைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை கடந்தாண்டு ஆய்வு செய்தது போல், இந்தாண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டு, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் திருச்சி வந்தார். அங்கு முதல்வருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காரில் புறப்பட்டு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். வழிநெடுக முதல்வரை பொதுமக்கள் வரவேற்றனர். கார் ஊர்ந்து செல்ல, அதிலிருந்தபடி பொதுமக்கள் அளித்த மனுக்கள், புத்தகங்கள், சால்வைகளை முதல்வர் பெற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து நேற்று மாலை தஞ்சாவூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மாபேட்டை அருகே வடபாதி கொக்கேரியில் நடந்த வடிகால்  தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வேளாண் துறை மூலம் குறுவை சாகுபடிக்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் விதை உரம் இருப்பு நிலவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்குகளை  பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அரசின் நீர்வளத்துறை திட்டங்கள் குறித்த திரைக்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார்.

ஆய்வுக்குப் பின் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் நடந்து சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர்  திருவாரூர் வழியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சென்றார். அப்போது திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில்வெண்ணி என்ற இடத்தில், அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு காரில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 7 மணிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 9.15 மணிக்கு  நாகை அடுத்த கருவேலங்கடை கிராமத்தில் நடைபெறும் கல்லாறு வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

* மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் அதிரடி ஆய்வு
திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதியம் 12.40 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக வருகைப்பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர், மாநகராட்சி மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய பஸ் நிலைய அமைப்பு பணியின் நிலை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மனு அளிக்க வந்த பொதுமக்களிடமிருந்து தாமே மனுக்களை பெற்று கொண்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வரின் திடீர் ஆய்வால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

* திமுக மூத்த நிர்வாகி செல்வேந்திரனிடம் நலம் விசாரித்தார்
திருச்சி உறையூரில் வசித்து வரும் திமுக மூத்த நிர்வாகியும், திமுக வெளியீட்டு செயலாளருமான திருச்சி செல்வேந்திரன் வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே உள்ளார். நேற்று திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உறையூரில் உள்ள செல்வேந்திரன் இல்லத்துக்கு நேரில் சென்றார். அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.


Tags : Nagai ,Mayeladududurai ,Thiruvarur ,Thanju ,K. Stalin , MK Stalin's inspection of Naga, Mayiladuthurai, Thiruvarur and Thanjavur works today
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு