நேபாள விமான விபத்து 21 பேரின் சடலங்கள் மீட்பு: மேலும் ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரம்

காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் பலியானவர்களில் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பயணியின் சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நேபாளத்தின் சுற்றுலா நகரான பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு தாரா ஏர் நிறுவனத்தின்  விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது.  கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் விமானத்தை தேடும் பணி நடந்தது.  விமானத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். இவர்களில் 4 பேர் இந்தியர்கள், 2 ஜெர்மனியை சேர்ந்தவர்கள், தவிர மற்ற அனைவரும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், தசங்-2,  மஸ்டாங் மாவட்டத்தில் உள்ள சனோஸ்வெர்  மலை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.  

சம்பவ பகுதியில், நேபாள ராணுவ வீரர்கள் உள்பட 100 பேர் பேர் அடங்கிய குழு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. நேற்று மாலை வரை 21  சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில்,‘‘ மலையில்  மோதி விபத்துக்குள்ளானதில் விமானம் பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதன் காரணமாக அதில் பயணிகளின் உடல்கள் 100 மீட்டர் சுற்றளவுக்கு ஆங்காங்கே சிதறி கிடந்தன’’ என்றார். விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை தொழிலதிபர் குடும்பமே பலி

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் குடும்பத்தினர் 4 பேர் பலியாகி உள்ளனர். மும்பை தானேவை சேர்ந்தவர் அசோக் குமார் திரிபாதி(54). ஒடிசாவில் நிறுவனம் நடத்தி வரும் திரிபாதியின் மனைவி வைபவி பாண்டேக்கர், அவரது மகன் தனுஷ்(22), மகள் ரித்திகா(15) ஆகியோருடன் விடுமுறையை கழிக்க நேபாளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் 4 பேரும் விமான விபத்தில் பலியாகி உள்ளனர். கணவனும், மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கணவன், மனைவியும் மீண்டும் சேர்ந்து வாழும் முயற்சியாக இந்த பயணம் மேற்கொண்டபோது விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: