நேபாளத்தில் விமானம் நொறுங்கிய விழுந்த விபத்தில் 22 பேரும் உயிரிழப்பு: 21 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரம்..!

காத்மண்டு: நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை ‘தாரா’ ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள் (மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர்), 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் சேர்த்து 22 பேர் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன? யாரேனும் உயிருடன் உள்ளனரா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து நேபாள நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் நாராயண் சில்வால் கூறுகையில், ‘விபத்து நடந்த இடத்தை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் பகிரப்படும். முஸ்டாங் மாகாணம் தசங்-2 என்ற இடத்தில் விமானத்தில் பாகங்கள் கிடக்கின்றன’ என்றார். இருந்தும் விமானத்தில் பயணித்தவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மோசமான வானிலை மற்றும் மேகமூட்டமான சூழல் காரணமாக விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம்.

வெடித்து சிதறிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உடல் கருகி பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. விமானத்தின் கருப்பு பெட்டி, தடயங்கள், விமானியின் கடைசி நேர பேச்சு, தகவல் தொடர்பு சிக்னல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், ‘தாரா ஏர்’ என்ற மற்றொரு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதே பாதையில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனர். கடந்த 2018ல் யுஎஸ்-பங்களா ஏர் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது; அந்த விபத்தில் 51 பேர் பலியாகினர்’ என்றனர்.

Related Stories: