×

கோவையில் களைகட்டும் பரளிக்காடு சூழல் சுற்றுலா: சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய உணவளிக்கும் பழங்குடிகள்

கோவை: கோவை மாவட்டம் காரமணி வனப்பகுதிக்கு உட்பட்ட பில்லூர் பவானி ஆற்றில் வனத்துறையினர் நடத்தும் பரளிக்காடு சூழல் சுற்றுலா, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை தினங்களில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் சூழல் சுற்றுலா களைகட்டுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமான அழகு, பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை மற்றும் காடுகளை பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை ஒட்டுமொத்தமாக அள்ளித்தருகிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா. குளுகுளு கால நிலையுடன் சூழல் சுற்றுலாவை அனுபவிக்க கோவை மாவட்டம் வனத்துறையின் Coimbatore wildannas.com என்ற இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த சூழல் சுற்றுலாவில் 1 மணி நேரம் பவானி பரிசல் பயணம், வனப்பகுதிக்குள் சிறிது தோற்றம் ட்ரக்கிங் மற்றும் பவானி ஆற்றில் புலிகள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்படும். நாளொன்றிற்கு 120 பேர் மட்டுமே சூழல் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவர். சூழல் சுற்றுலாவை நாடி வருவோருக்கு பழங்குடியின பெண்கள் பாரம்பரிய முறைப்படி தயாரித்த ராகி களி, கீரைக்குழம்பு உள்ளிட்ட 16 வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

வெளி உலக தொடர்பே இல்லாமல் இருக்கும் தாங்கள், வெளியாட்களை கண்டாலே வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நிலையை சூழல் சுற்றுலா மாற்றியுள்ளதாக கூறும் பழங்குடியின பெண்கள் இத்திட்டத்தால் பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்க்கை நிலையும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சூழல் சுற்றுலா மூலம் 5 மலைகிராம மக்கள் பயனடைவதாகவும் பழங்குடியினர் தெரிவிக்கின்றனர். சூழல் சுற்றுலாவில் வழங்கப்படும் பழங்குடியினரின் உணவு ருசியாக இருப்பதாக கூறும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணமும், பவானி ஆற்று குளியலும் மனஅழுத்தத்தை குறைத்து இயற்கையை மொத்தமாக ரசித்திட ஒரு வாய்ப்பாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். கோடை விடுமுறையை இயற்கையுடன் கொண்டாட விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு சூழல் சுற்றுலா ஒரு வரபிரசாதம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.              


Tags : Coimbatore, Paralikadu, Eco Tourism, Tourist, Food, Tribes
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...