கோவை: தன்னை திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சிறைக்காவலர் மீது துணை ஜெயிலரின் மகள் புகார் அளித்துள்ளார். கோவை மத்திய சிறை துணை ஜெயிலரின் மகள், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கோவை மத்திய சிறையில் காவலராக இருந்த ரவிக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ரவிக்குமார் திருப்பூருக்கு மாறுதல் பெற்று சென்ற நிலையில், கடந்த மார்ச் 28-ம் தேதி பொள்ளாச்சி மாசானியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அலைபாயுதே திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் வசித்து வந்ததாகவும், தற்போது வேறாரு பெண்ணை திருமணம் செய்ய ரவிக்குமார் ஆயுத்தமாகி வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து கேட்கச் சென்ற தன்னை, ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலைமிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலர் ரவிக்குமார், அவரது பெற்றோர் மீது கொலைமுயற்சி, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
