×

இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய பதவி விலகினால் பசில் ராஜபக்சே அடுத்த அதிபர்: நீதித்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி

கொழும்பு: இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய பதவி விலகினால், பசில் ராஜபக்சே தான் அடுத்த அதிபர் என்று நீதித்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ராஜபக்சே குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட வன்முறையால் துப்பாக்கி சூடு, தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின.

அதனை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். அவரே நிதித்துறை பொறுப்பையும் கவனித்து வருகிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு செய்து வருகிறது. புதிய அரசு அமைந்தாலும் கூட, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் 50வது நாள் எட்டியதை குறிக்கும் வகையில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. அப்போது, ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இலங்கையில் போராட்டம் ஓய்ந்த நிலையில், மீண்டும் போராட்டம் வலுப்பெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அஸ்கிரிய பீடத்தின் சியாம் பீடாதிபதியை சந்தித்து ஆசிபெற்ற நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறுகையில், ‘இலங்கை பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது.

இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இன்றைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவரான பசில் ராஜபக்சே உள்ளார். எனவே, அவர்தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யபடுவார்’ என்று தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இலங்கையின் பாஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திற்கு அருகே இன்று காலை, பைக்கில் வந்த இருவர் அவ்வழியாக சென்ற மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். திடீர் தாக்குதலால் மக்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Basil Rajapakse ,Chancellor ,Gothabaya ,President ,Sri Lanka , If Gotabhaya resigns as President of Sri Lanka, Basil Rajapaksa will be the next President: Justice Minister
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...