×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீரால் மீன்வளம் பாதிப்பு: மீனவர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறக்கூடிய சுடுநீரால் எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி, மீனவர்கள் படகில் சென்று போராட்டத்தில் நடத்தினர். சென்னை அடுத்த மீஞ்சூரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறக்கூடிய சுடுநீர் ஆற்றில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், அதேபோல், முகத்துவாரம் பகுதியில் நீர் கலப்பதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எண்ணூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மீனவகுப்பம், தாழங்குப்பம், இருட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம் உட்பட 8 மீனவ கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர், 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு, அனல்மின் நிலையத்திலிருந்து சுடுநீர் வெளியேற செல்லும் பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக, சுடுநீர் ஆற்றில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது; மேலும் முகத்துவாரம் பகுதி ஏற்கெனவே தூர்ந்து இருப்பதால், அதனை முழுவதுமாக தூர்வார வேண்டும் மற்றும் முகத்துவாரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர். அதேபோல் வாழ்வாதரம் இழந்துள்ள சூழ்நிலையில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும், அனல்மின் நிலைய அதிகாரிகளும் மீனவ பிரதிநிதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், உரிய தீர்வுகள் எட்டப்படாவிடில், அடுத்தகட்டமாக போராட்டம் பெரிய அளவில் தொடரும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   


Tags : Vadasennai ,Analmin Station , North Chennai, Thermal Power Station, Hot Water, Fisheries, Fishermen, Struggle
× RELATED ஒன்றிய பாஜ அரசிடம் தமிழக உரிமைகளை...