மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது ஆம்னி பஸ் மோதியது பெண் உள்பட 2 பேர் பரிதாப சாவு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை தாம்பரம், காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் இருந்து 42க்கு மேற்பட்டவர்கள் ஒரு ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பினர். அந்த பஸ், இன்று அதிகாலை 3 மணி அளவில், மதுராந்தகத்தை அடுத்த மேலவலம்பேட்டை பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி நொறுங்கியது. இதில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து கூச்சலிட்டனர்.

விபத்தை  பார்த்ததும் அப்பகுதி மக்கள் சென்று, பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இதில், நாகூர்கனி (70) என்பவர் பரிதாபமாக  உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சென்னையை சேர்ந்த டில்லிராணி (50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: