×

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-வியாபாரிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி : கோடை விடுமுறையையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளால் திணறியது. உள்ளூர் சுற்றுலா பயணிகள் தவிர கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நேற்று கன்னியாகுமரியில் குவிந்தனர். இதனால் கடற்கரை சாலை, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன.

 அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், பின்னர் திரிவேணி சங்கம கடலில் குளித்து மகிழ்ந்தனர். ஏராளமானோர் பகவதியம்மன் கோயில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் படகுகளில் சென்று பார்வையிட்டனர்.கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை 1 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.மாலை வரை 8010 பேர் படகுகளில் சென்று விவேகானந்தர் மண்டபம்,திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு இருந்தனர்.

  மேலும் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகியவற்றையும் ஏராளமானோர் பார்வையிட்டனர். மாலையில் கோவளம் சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியையும் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. இதேபோல் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Kanyakumari , Kanyakumari: People are flocking to tourist destinations for summer vacations. Yesterday was the last Sunday of May
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...