திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்: சாலைகளிலும் நிரம்பி வழியும் கூட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கம்போல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் தற்போது தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

நேற்று முன்தினம் மாலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிரம்பி 4 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்றும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. நேற்று 90,885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35,707 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் ₹4.18 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பதால் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள நிலவரத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. என்றாலும் பக்தர்கள் வருகை குறையவில்லை.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் பக்தர்கள் வழக்கம்போல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் வருகையால் திருமலையில் உள்ள தங்கும் அறைகள் மட்டுமின்றி சாலைகளும் நிரம்பியே காணப்படுகிறது.

Related Stories: