ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

மதுரை : தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில், கண் கருவிழி பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயலில் வேலை பார்ப்பதால் சிலருக்கு கைரேகை பதிவாவதில் சிக்கல் இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, சோதனை முயற்சியாக கருவிழி சரிபார்ப்பு முறை மூலம் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மக்களுக்கு பயன் தரும் வகையில் இருந்தால், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேசன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேசன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைக்கு குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்; ரேசன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக 2 டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: