கலைஞரின் 99 வது பிறந்த நாளில் அனைத்து மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் செய்யப்படும்: திமுக வழக்கறிஞர்கள் அணி தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவில், அனைத்து மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடப்படும் என திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக வழக்கறிஞர் அணி, சட்டத்துறை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்  கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுக சட்டத்துறை தலைவர் விடுதலை தலைமையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன்,

இணை செயலாளர்கள் கண்ணதாசன், மணிராஜ், தண்டபாணி, துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தினேஷ், தலைமை வழக்கறிஞர்கள் சந்துரு, லிவிங்ஸ்டன், மறைமலை   மற்றும் சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் ரகு, கிழக்கு மாவட்ட அமைப்பாளர் துரை கண்ணன், தென்மேற்கு மாவட்ட அமைப்பாளர் கணேசபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழாவினை பூவுலகமே வியந்து நோக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்தியதற்கும், ஜூன் 3ம் நாளை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும். விவசாய குடும்பத்தில் பிறந்து இந்தியா மட்டுமல்லாமல் வையகமே திரும்பிப் பார்த்திடும் வகையில் இறுதிவரை எதற்கும் அசைந்து கொடுக்காமல் கொள்கைவழி நின்று அயராதுழைத்த கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவை திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இனிப்பு வழங்கியும்  மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தும் சிறப்பாக கொண்டாடப்படும்.

தமிழகத்தை அகில இந்திய  அளவில் முதன்மை மாநிலமாக்கி, நல்லாட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின்  ரூ.7 லட்சமாக இருந்த வழக்கறிஞர்களின் சேமநல நிதியினை ரூ.10 லட்சமென உயர்த்தி வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. திமுக வழக்கறிஞர் அணிக்கு பெருமை சேர்த்திடும் வகையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜனுக்கு  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வழக்கறிஞர் அணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: