நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 13 மாவட்ட சாலைகளில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டப்பணியை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னை: நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 13 மாவட்ட சாலைகளில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டப்பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க அமைச்ர் எ.வ.வேலு உத்தரவால் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில், 2020 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதை தொடர்ந்து, சென்னை நகர சாலைகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு வாணியம்பாடி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் சிறு பாலங்கள், மதகுகள் மற்றும் வடிகால்வாய்களை நிரந்தரமாக சீரமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த அறிக்கையின் பேரில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இப்பணிகளை மேற்கொள்ள ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டார். இந்த நிதியை கொண்டு, நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் வடிகால்கள், சிறுபாலங்கள், குழாய் பாலங்களை மாற்றுதல், சேதமடைந்த பாதுகாப்பு பணிகளை புனரமைத்தல், கூடுதல் பாலங்கள், கூடுதல் வழிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகளுக்கு ரூ.271.75 கோடியிலும், முக்கிய மாவட்ட சாலைகளுக்கு ரூ.53.63 கோடியும், இதர மாவட்ட சாலைகளுக்கு ரூ.66.78 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மாநகர சாலைகளான ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி சாலை, ஜிஎன்டி சாலை,உள்வட்ட சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பாலங்கள் ரூ.200 கோடியிலும், தாம்பரம், முடிச்சூர் சாலை, மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை, பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.168 கோடியிலும், மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை, புழுதிவாக்கம் சாலை, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை, மாதவரம்-செங்குன்றம் சாலையில் மழைநீர் வடிகால்கள் அமைக்க ரூ.24 கோடி உள்பட மாநிலம் முழுவதும் ரூ.392 கோடியில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டன.

இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த பணிகளை சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வடகிழக்கு பருவமழை ெதாடங்குவதற்கு முன்பாக, இப்பணிகள் அனைத்தையும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: