×

புதிய சாப்ட்வேர் பதிவேற்றத்தின்போது தொழில்நுட்ப கோளாறு எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா ரூ.13 கோடி டெபாசிட்

சென்னை: எச்டிஎப்சி வங்கியின் தி.நகர் கிளையில் புதிய சாப்ட்வேர் பதிவேற்றத்தின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100 பேருக்கு தலா ரூ.13 கோடி வீதம் ரூ.1300 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. தங்கள் கணக்கில் 13 கோடி ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் எச்டிஎப்சி வங்கியின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கிளையில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், 27ம் தேதி காலை, தனது வாடிக்கையாளர்களில் 100 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தியும் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு சென்றது.

இதனால், ஆனந்த அதிர்ச்சியடைந்த வாடிக்கையார்களில் சிலர் ரூ.13 கோடி ஒரே சமயத்தில் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வங்கி சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டனர். அதன்பிறகே 100 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1300 கோடி  தவறுதலாக வரவு வைக்கப்பட்டது, வங்கி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இது சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தியுடன் மின்னல் வேகத்தில் பரவியதால் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்பு, பாஜ சார்பில் மத்தியில் ஆட்சிக்கு வரும் போது வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு சிலர் மத்திய அரசு சார்பில் தமக்கு ரூ.15 லட்சம் வந்துவிட்டதாக நினைத்து கொண்டனர். அதன்படி சிலர் ஆன்லைன் மூலம் பணம் எடுக்க முயற்சி செய்த போது, தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் சில வாடிக்கையாளர்கள் ரூ.13 கோடி பணத்தை எடுக்க முடியவில்லையே என்று நொந்து கொண்டனர். எனினும் சிலர் பணத்தை உடனடியாக எடுத்துவிட்டனர். அவர்களிடம் பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையில் வங்கி நிர்வாகம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே வங்கி சார்பில் ரூ.1300 கோடி தவறுதலாக சென்றது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், எச்டிஎப்சி வங்கியின் புதிய மின்பொருள் ஒன்றை பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறாக பணம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு சென்றது. அதேநேரம் அவர்களுக்கு இது தொடர்பாக குறுஞ்செய்தியும் சென்றது. ஆனால் உடனடியாக தவறு கண்டுபிடிக்கப்பட்டு, யாரும் அந்த பணத்தை எடுக்க முடியாதபடி வங்கி கணக்கிற்கே மீண்டும் மாற்றப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. 100 பேருக்கு தலா ரூ.13 கோடி வீதம் ரூ.1300 கோடி பணம் பறிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதால், மகிழ்ச்சியில் இருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags : New software upload, technical glitch, HDFC customers,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...