வெடிகுண்டுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி

ஜம்மு: நவீன வெடிகுண்டுகளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் பறக்க விடப்படும் என்பதால், கூடுதல் கண்காணிப்பு பணி இங்கு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று பறந்தது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரோனை சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில், அதிநவீன காந்த குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. ஜம்முவில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இன்று தொடங்க உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, இரண்டு வழிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில்,  யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெடிகுண்டுகளுடன் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால், யாத்திரையை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: