×

நேபாளத்தில் விமான விபத்து 4 இந்தியர் உட்பட 22 பயணிகள் பலி?

காத்மண்டு: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் சிக்கினர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து ஜோம்சாம் என்ற இடத்துக்கு தாரா ஏர் நிறுவனத்தின் 9 என்- ஏஇடி இரட்டை  இன்ஜின் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது.  அதில், 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணம் செய்தனர். ஆனால், விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் அது தொடர்பை இழந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே, விமானத்துடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

உடனே, விமானத்தை தேடும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், ராணுவம், காவல் துறையினரை நேபாள அரசு ஈடுபடுத்தியது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விமானத்தில் மும்பையை சேர்ந்த 4 பேர் உள்ளனர். மேலும், ஜெர்மனியை சேர்ந்த 2 பயணிகளும், 13 நேபாள  பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், மஸ்தாங் என்ற இடத்தில் விமானம் நொறுங்கி விழுந்து கிடப்பதை மீட்பு குழுக்கள் கண்டுபிடித்து உள்ளன. வானிலை மிகவும் மோசமாக இருப்பதால், நேற்றிரவு வரையில் அந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. விமானம் நொறுங்கி கிடப்பதால் அதில் பயணம் செய்தவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய பயணிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது, மேலும், அவர்கள் தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்: 977-9851107021.யும் அளித்துள்ளது.

* செல்போன் மூலம் கண்டுபிடிப்பு
காணாமல் போன விமானத்தின் கேப்டன் பிரபாகர் கிமிரேவின் செல்போன் இருக்கும் இடம் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செல்போன் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விமானம் நொறுங்கி விழுந்ததாக கருதப்படும் இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கி இருப்பதாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் பிரேம் நாத் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Tags : Nepal ,Indians , Plane crash in Nepal kills 22 passengers including 4 Indians?
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது