கேன்ஸ் திரைப்பட விழா ஈரான் நடிகைக்கு விருது: இந்திய ஆவணப்படம் சிறந்ததாக தேர்வு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டது. தமிழில் பார்த்திபன் இயக்கி நடித்த சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’, நடிகர் மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ உள்பட பல படங்கள் திரையிடப்பட்டு, உலக சினிமா நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன், பார்த்திபன், பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன், தமன்னா, ஊர்வசி ரவுட்டாலா, பா.ரஞ்சித் உள்பட இந்திய திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஈரானிய நடிகை ஜார் அமீர் இப்ராஹிமி பெற்றார். டேனிஷ், ஈரானிய இயக்குனர் அலி அப்பாஸி இயக்கிய ‘ஹோலி ஸ்பைடர்’ என்ற படம், கடந்த 2000ம் ஆண்டுக்கு முற்பகுதியில் புனித நகரமான மஷாத்தில், பல விபச்சாரிகளை கொன்ற ‘ஸ்பைடர் கில்லர்’ என்று கூறப்படும் கொலைக் குற்றவாளியின் உண்மைக்கதையின் பின்னணியில் வெளியானது. இந்தப் படம் ஈரான் மற்றும் ஜோர்டானில் படமாக்கப்பட்டது. இதில் ஈரானிய நடிகை ஜார் அமீர் இப்ராஹிமி (41) என்பவர், விபச்சாரிகளின் தொடர் கொலைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் பத்திரிகையாளராக நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளது.

 விருது பெற்ற ஜார் அமீர் இப்ராஹிமி கூறுகையில், ‘இந்த மேடையில் நான் இருப்பதற்காக வெகுதூரம் கடந்து வந்ேதன். இது சாதாரணமான விஷயம் இல்லை. நான் சினிமாவால் காப்பாற்றப்பட்டேன்’ என்றார். அவர் தனது 20வது  வயதில் ‘நர்கெஸ்’ படத்தில் அறிமுகமானார்.

* இந்தியாவுக்கு ஒரு விருது

இந்திய திரைப்பட இயக்குனர் சவுனக் சென்னின் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ என்ற ஆவணப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாக தேர்வாகி தங்கக்கண் விருது பெற்றுள்ளது. இது டெல்லியின் வஜிராபாத்தில் இருக்கும் பாழடைந்த கூடாரத்தில் வசிக்கும் சகோதரர்கள் முகமது சவுத், நதீம் ஷெஹ்சாத் ஆகியோர், காயமடைந்த பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட படமாகும்.

Related Stories: