×

டெல்டாவில் தூர்வாரும் பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு: காட்டூரில் கலைஞர் மணிமண்டப பணிகளை பார்வையிடுகிறார்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் காட்டூரில் கலைஞர் மணிமண்டப பணிகளை பார்வையிடுகிறார். கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் நலன் கருதி அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட கூடுதலான அளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் நடப்பாண்டிலும் தூர்வாரும் பணிய கடந்த 1ம் தேதி முன்கூட்டியே துவங்கப்பட்டு நாளை முடிக்கப்படுகிறது.

மேலும் மேட்டூர் அணையும் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் நடப்பாண்டில் மே மாதம் 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூர்வாரும் பணிகளை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று பகல் 12.30 மணியளவில் வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் டிவிஎஸ் டோல்கேட் ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு  இரவு 7 மணி அளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்  தங்குகிறார்.

பின்னர் நாளை காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 9.15 மணிக்கு நாகையை அடுத்த கருவேலங்கடை கிராமத்தில் நடைபெறும் கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன்பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொத்தங்குடி என்ற இடத்தில் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்கிறார். அங்கிருந்து காட்டூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டப்பட்டு வரும் கலைஞர் மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் சன்னதி தெரு இல்லத்தில் மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் முதல்வர் நீடாமங்கலம் வழியாக தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை பார்வையிடுகிறார். அங்கிருந்து மாலை 6 மணி அளவில் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். இரவு 7 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு சென்னை செல்கிறார்.

Tags : Delta ,K. Stalin ,Hourhood ,Cuttur , Chief Minister MK Stalin inspects delta work tomorrow: Artist visits mandapam works in Kattoor
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...