×

உடையார்பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் தெப்பதிருவிழா

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம்-உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரி அருகே கண்ணனூர் மாரியம்மன் கோயில் மற்றும் ஏரியில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கையுடன் இன்னிசை முழங்க தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.ஏரியை சுற்றி படிக்கட்டுகளில் நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் திருச்சி - சிதம்பரம் சாலையில் கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமணத்தடை குழந்தை பேரின்மை வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் வகையில் பிரசித்தி பெற்ற கண்ணனூர் மகாமாரியம்மன் ஆலயத்தில் நிச்சயதார்த்தம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவதும் வழக்கம். கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. தற்பொழுது அரசு அனுமதியுடன் ஊர் நாட்டார் கோபாலகிருஷ்ணன் மற்றும் கீழத்தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக தெப்பத் திருவிழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஒரு மாத காலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தெப்பத்திருவிழா ஏரி மற்றும் கோயிலைச் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் இன்னிசை முழங்க விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கண்ணனூர் மகாமாரியம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண மலர்களால் அம்மனை அலங்கரித்து வீதி உலா வந்து வேலப்ப செட்டி ஏரி தெப்பக்குளத்தில் மூன்று முறை சுற்றி வந்தது. ஏரியை சுற்றி படிக்கட்டுகளில் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர். இதில் உடையார்பாளையம் கிராமத்தைச் சுற்றி உள்ள ஏராளமான பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர் . முன்னதாக ஊர் நாட்டார் கோபாலகிருஷ்ணனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.


Tags : Kannur Mariamman Temple Festival ,Uthayarpalayam , Kannanur Mariamman Temple Teppathiruvila at Udayarpalayam
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி