×

இந்தியாவின் சக்திவாய்ந்த முதல்வராக கலைஞர் திகழ்ந்தார்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு புகழாரம்

சென்னை: இந்தியாவின் சக்திவாய்ந்த முதல்வராக கலைஞர் திகழ்ந்தார் என்று துணை ஜனாதிபதி புகழ்ந்து ேபசினார். சென்னை அண்ணா சாலையில் கலைஞரின் 16 அடி உயர சிலையை திறந்துவைத்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:  இந்தியாவின் மிக ஆற்றல் வாய்ந்தவர்களில் ஒருவர் கலைஞர். இந்த நிகழ்ச்சியில் உங்களோடு கலந்து கொண்டும் இந்தியாவின் மிகப்பெரிய மகனாக விளங்கிய கலைஞரின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் இந்தியாவின் மிகச்சிறந்த நிர்வாகி ஆவார். நிலையான ஆட்சியை தந்தவர்.

நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த புகழ்பெற்ற தலைவர் கலைஞர்.   ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் . கலைஞர் போன்ற தலைசிறந்த தலைவர்கள் இதைத்தான் செய்ய முயன்றார்கள். இந்தியாவின் சக்திவாய்ந்த முதலமைச்சர்களுள் கலைஞரும் ஒருவர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அவர் ஊக்குவித்தார்.

கடந்த காலத்தில் முரசொலிமாறனும் கலைஞரும் கைது செய்யப்பட்டபோது அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து நிலைமை குறித்து அவர்களுக்காக பேசினேன். பல்வேறு திறமைகளின் தனித்துவமான கலவையோடு ஓர் பல்துறை வித்தகர் கலைஞர். தாம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற நுட்பமான அரசியல்வாதியாக இருந்ததுடன், சுமார் ஐம்பது ஆண்டு காலம் தமது கட்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.

தமிழ்மீது அதிகம் தீராத பற்று கொண்டவர். நாம் நமது தாய்மொழியை வளர்க்க வேண்டும். அதை மேம்படுத்த வேண்டும். உங்கள் தாய்மொழியை பரப்புங்கள். மம்மி, டாடி கலாச்சாரத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள். தாய் மொழியிலேயே பேசுங்கள்.  தாய்மொழிதான் முதலில். தமிழ்மொழியை அதிகம் மதிப்பவன் நான்.

தமிழை நேசித்த கலைஞரை நான் மதிக்க தவறுவதில்லை. அவர் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் வளர்த்தவர். எந்த மொழிக்கும் நாம் எதிராக இருக்க கூடாது. எந்த மொழியையும் நாம் கற்கலாம். வெளிநாட்டு மொழிகளையும் கற்கலாம். ஆனால், உங்கள் தாய்மொழிதான் முதலில் இருக்க வேண்டும்.  நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சாம்பியனாக கலைஞர் திகழ்ந்தார்.  தமது தாய்நாடு மீதும், தாய் மொழி மீதும் அளவற்ற பற்று கொண்டிருந்ததோடு, செம்மொழியான தமிழில் உள்ள இலக்கிய படைப்புகள் பற்றியும், மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சார வளம் பற்றியும் உலகம் தெரிந்துகொள்ள உதவினார்.

 மாநிலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இடம்பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ தமிழ்நாட்டின் இறைவணக்கப் பாடலாக 1970ல் கலைஞர் உருவாக்கினார். கலைஞர் ஒரு தலைவர். அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்யும். கூட்டாட்சி உணர்வு மற்றும் கூட்டாட்சியில் போட்டித்தன்மை என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான திறனை உணரும். முதல்வர் மு.க. ஸ்டாலின், தந்தை கலைஞரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் வழிநடத்தப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.

எந்த மொழியையும் திணிக்க கூடாது
‘‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது’’ என்ற குறள் கலைஞருக்கு பொருந்தும். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு.

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது. தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்’’ என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.

Tags : India ,Vice President ,Venkaiah Naidu , India, Powerful Chief Minister, Artist, Vice President Venkaiah Naidu,
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..