×

சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலீசார் பதிலளிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: ஒவ்வொரு சாதாரண குடிமகனின் மனுவிற்கும் போலீசார் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த விசாலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழநி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடை வைத்துள்ளேன். இதற்கு தடையின்மை சான்று கேட்டு பழநி நகர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளேன். இதுவரை சான்று வழங்கவில்லை. எனவே, தடையின்மை சான்றை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பழநி நகர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர், ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்ததாக மனுதாரர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு இதுவரை தடையின்மை சான்று வழங்கவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனுவை நிராகரித்து போலீசார் உத்தரவிடவில்லை. எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. இது ேபாலீசாரின் மந்தமான செயலையே காட்டுகிறது.

ஒவ்வொரு சாதாரண குடிமகனின் மனுவிற்கும் போலீசார் எந்தவிதத்திலும் பதிலளிக்க வேண்டும். ஆனால், பதிலளிக்காமல் கிடப்பில் வைக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. ஒவ்வொரு ஏழை குடிமகனாலும் அதிகம் செலவிட்டு நீதிமன்றத்தை நாட முடியாது. ஆடல், பாடல் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு கூட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறவேண்டுமென்ற போலீசாரின் அணுகுமுறை தேவையற்றது. போலீசாரின் செயல்பாடற்ற நிலை நிராகரிக்கப்பட வேண்டும். எனவே, மனுதாரரின் மனுவை திண்டுக்கல் எஸ்பி 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Tags : iCourt Branch , Ordinary Citizen, Police, Icord Branch
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...