குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம் 3 டன் பழங்களால் உருவான ஜல்லிக்கட்டு காளை, டிராகன்: சுற்றுலா பயணிகளை கவர்கிறது

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடக்கிறது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பாக கோடை விழா கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி,  படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோடைவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது  பழக்கண்காட்சி நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை முன்னிட்டு  நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 3 டன் பழங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு அலங்கரிப்பட்ட நுழைவாயில், கழுகு, டெடிபியர், ஊட்டி 200 உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள்  அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில் 25 அரங்குகள் அமைத்து, டிராகன், அணில், புலி, பூண்டி அணையின் உருவம், மயில், ஜல்லிக்கட்டு காளை மற்றும் தர்பூசணி பழங்களில் அண்ணா, கலைஞர், ஸ்டாலின்  உருவங்கள், தாஜ்மஹால், கோயில் தேர் உட்பட பல்வேறு வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கும் அரிய வகை பழங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Related Stories: