லீவு விட்டாச்சு!: ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 4 கி.மீ. தூரம் நீளும் வரிசை..!!

ஆந்திரா: கோடை விடுமுறையையொட்டி திருப்பதி திருமலையில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைன் வாயிலாக விநியோகித்து வருகிறது. இது தவிர இலவச தரிசனத்திலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. இதனால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன.

இதன் வெளியிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து வருகின்றனர். இலவச தரிசன முறையில் சுவாமியை காண சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக ஆகிறது. வார இறுதி நாளான நேற்று 73,358 பேர் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். சுமார் 42 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 4 கோடியே 11 லட்சம் காணிக்கையாக கிடைத்ததாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வார இறுதி நாள்களில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்தான்.

ஆனால், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள்  கூட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 

Related Stories: