சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா-கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்தாமரைகுளம் :  சாமிதோப்பு  அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் தை, ஆவணி  மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த  வருட வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4  மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும்,  காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.

 குருமார்கள் பால லோகாதிபதி,  பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை  குருமார்கள் வக்கீல் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனாவைகுந்த் ஆகியோர் செய்தனர்.  பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி  நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும்  நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

வருகிற  3ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு  அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி  முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல  கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும்  நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில்  அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.  திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் இந்திர வாகனத்திலும்  அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 6ம் தேதி  (திங்கள் கிழமை) 11ம் திருவிழா  அன்று நண்பகல் 12 மணிக்கு  தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும்  நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை  பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும்,  கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் 3 வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன  அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Related Stories: