×

கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கியூட் எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி பிற பல்கலைக்கழகங்களும் கியூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என யுஜிசி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, சில மாநில அரசு பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக் கழகங்களும் கியூட் நுழைவுத் தேர்வை ஏற்பதாக அறிவித்தன. கியூட் நுழைவுத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில், கியூட் நுழைவுத்தேர்வை சில ஒன்றிய பல்கலைக் கழகங்களே ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது 54 ஒன்றிய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 44 பல்கலைக் கழகங்கள் கியூட் தேர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

அதிலும், டெல்லி பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் போன்ற 10க்கும் மேற்பட்ட ஒன்றிய பல்கலைக் கழகங்கள், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு மட்டும் கியூட் தேர்வை ஏற்பதாகவும், முதுகலை படிப்புக்கு கியூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்றும் மறுத்துள்ளன. இதனால் யுசிஜி தலைவர் ஜெகதீஷ் குமார் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் பல பல்கலைக்கழகங்கள் இத்தேர்வில் இணையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Tags : Union University ,UGC , CUT Entrance Exam, Union University, UGC
× RELATED புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த...